சேலத்தில் மின்சாரம் தாக்கி பலியானகட்டிட தொழிலாளி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
- சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது.
- நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்களான சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தபுஷ்பராஜ் (வயது 23), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த மணி, வீரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த வீட்டையொட்டி மின்சார கம்பம் இருப்பதுடன் ஒயரும் செல்கிறது. நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது. மின்சார கம்பி மீது படாமல் இருக்க தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் புஷ்பராஜ் அலுமினியத்தால் ஆன மட்டை பலகையை எடுத்த போது, அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார கம்பி மீது உரசியது.
இதனால் புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த வீரன், மணி ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். வீரன், மணி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மின்சாரம் தாக்கி பலியான புஷ்பராஜ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புஷ்பராஜ் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.