உள்ளூர் செய்திகள்

கட்சியில் சிறப்பாக செயல்படாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்-எடப்பாடி பழனிசாமி

Published On 2024-07-11 05:52 GMT   |   Update On 2024-07-11 05:52 GMT
  • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Tags:    

Similar News