பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கல்
- இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
- மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், சிகரள அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி தலைமை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியர் சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்து குமார், கிருஷ்ணன், ரகுராமன், வைரம், குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் நாகராஜ், மரக்கன்றுகள் நடுவதில் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் பங்கேற்று, பள்ளியில் பயிலும் 300 மாணவ மாணவிகளுக்கு மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட இலவச மரக்கன்றுகளை வழங்கினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியை இளமதி நன்றி உரை கூறினார்.