உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு செல்பவர்கள் அமரும் நாற்காலிகள் இலவசம்: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

Published On 2024-06-27 08:23 GMT   |   Update On 2024-06-27 08:23 GMT
  • ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாத பாடுபடுவார்கள்.
  • பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும்.

சென்னை:

அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாதபாடுபடுவார்கள்.

கை செலவுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர், புடவைகள், பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டத்தை சேர்ப்பது கஷ்டம்.

இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வேளச்சேரியில் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன், கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் நாற்காலிகளை தூக்கி குடையாக பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

பலர் நாற்காலிகளை தலையில் வைத்தபடியே மெல்ல அங்கிருந்து நகர்ந்தார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த நாற்காலிகளையே தூக்கிச் சென்றதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

ஆனால் உண்மையிலேயே கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு நாற்காலிகள் இலவசம் தான் என்றார் கவுன்சிலரும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளருமான வேளச்சேரி ஆனந்த்.

தனது 176-வது வார்டுக்கு உட்பட்டவர்களை கூட்டத்துக்கு வருமாறும், கூட்டத்தில் புது பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கடைசியில் அந்த நாற்காலிகளை எடுத்து செல்லலாம் என்றும் கூறி இருந்தாராம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதையாவது கொடுப்பதை விட நாற்காலிகளை கொடுத்தால் வீடுகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதினேன். இதற்காக மொத்தமாக 2 ஆயிரம் நாற்காலிகளை கம்பெனியில் இருந்து ரூ.400 விலைக்கு வாங்கினேன்.

இப்படி செய்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இடையில் எழுந்து சென்றால் நாற்காலிகளில் யாராவது அமர்ந்து விடுவார்கள். அப்புறம் நாற்காலி நமக்கு கிடைக்கிறது என்று கூட்டம் முடியும் வரை நாற்காலியை விட மாட்டார்கள். வெளியே செல்ல மாட்டார்கள் என்றார். கூட்டத்தை கவர எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?

Tags:    

Similar News