மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க தான்- அமைச்சர் பேச்சு
- கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
- 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.