உள்ளூர் செய்திகள் (District)

மு.க.ஸ்டாலின் சொல்வதை தி.மு.க. கவுன்சிலர்களே கேட்பதில்லை- எச்.ராஜா பேட்டி

Published On 2024-08-09 08:41 GMT   |   Update On 2024-08-09 08:41 GMT
  • பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது.
  • கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

பழனி:

பழனி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்கதேசத்தில் 20 சதவீத இந்துக்கள் இருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தில் அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக உள்ளனர்.

பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழனியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திரை உலகை முதலமைச்சர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கோவில்களை தி.மு.க. மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.

தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு மேயர் தேர்தலில் வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. முதலமைச்சர் சொல்வதை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட கேட்பதில்லை. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டி வருகின்றனர். கோவில் நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. கும்பாபிஷேகம் பக்தர்கள் நன்கொடையில்தான் நடக்கிறது. எனவே இந்து விரோதிகளிடம் இருந்து கோவில்களை காப்பாற்ற வேண்டும். இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தும் தி.மு.க.வின் ஜால்ராவாக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News