உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஆட்சி சாதனைகளை கிராம மக்களிடம் சொல்லுங்கள்-உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-07-24 05:39 GMT   |   Update On 2024-07-24 06:02 GMT
  • பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
  • 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.

சென்னை:

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.

தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.

இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.

மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News