போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க தி.மு.க. அரசு தான் காரணம்-பா.ஜ.க. இளைஞர்அணி தலைவர் குற்றச்சாட்டு
- மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி தேசிய இளைஞர் அணி தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரேம் யோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் ஷிவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க ஆளும் தி.மு.க. அரசு தான் காரணம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை அவர் வழங்கினார்
மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நகரத் தலைவர் பிரவீன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.