கடலூர் மாநகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி: மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு
- கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
- கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை யொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர் வண்டிப் பாளையம், முது நகர், பச்சையாங்குப்பம், நத்தவெளி சாலை, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணியை மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.