திராவிட கட்சிகள் வன்னியர்-தாழ்த்தப்பட்டோரை பிரித்து சூழ்ச்சி-டாக்டர் அன்புமணி ராமதாஸ்
- தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
- திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.
வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.
ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.
நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.