நெல்லை சந்திப்பில் குழாய் உடைப்பால் சாலையில் ஆறு போல் ஓடிய குடிநீர்
- நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
- இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
நெல்லை
நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை சப்ளை செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது.
குழாய் உடைப்பு
அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலை முழுவதும் ஆறு போல் ஓடியது. சமீபத்தில் அந்த சாலையின் குறுக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் மண்ணால் மூடப்பட்டது.
ஆறு போல் ஓடியது
இதன் காரணமாக அந்த இடம் மேடாக காட்சியளித்ததால், வெளியேறிய தண்ணீர் முழுவதும் ரெயில்நிலையம் செல்லும் சாலையை நோக்கி ஓடியது. அந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தி னர் குழாய் அடைப்பை சரி செய்து வருகின்றனர். ஏற்கனவே சந்திப்பு பகுதியில் வாறுகால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து போயும் இருப்பதால் மழை காலங்களில் அந்த இடம் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
எனவே மழை காலத்திற்கு முன்பாக அந்த பகுதியில் வாறுகால்களை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.