முருங்கைக்காய் கிலோ ரூ.150 ஆக அதிகரிப்பு
- வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.
- வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தேனி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருநெல்வேலி, மும்பை, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டுமே முருங்கைக் காய் விற்பனைக்கு வருகிறது.
தினசரி 1500 மூட்டைகள் வரை விற்பனைக்கு குவிந்து வரும் முருங்கைக்காய் இன்று 400 மூட்டைகளாக குறைந்தது. இதனால் முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.
இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.