முகவர் கமிஷன் பிரச்சினையால் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி விற்பனை- நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.
சென்னை:
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-
ஆவின் பால் விற்பனை மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. மாவட்டத்துக்கு மாவட்டம் சில்லரை விற்பனை, விலை, கமிஷன் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.1 குறைத்து வழங்குகிறார்கள். இது தவிர போக்குவரத்து மானியமாக லிட்டருக்கு 70 காசுகளும் வழங்கப்படுகிறது.
இதில் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் லாப பங்காக 50 காசுகளை எடுத்து கொண்டு பால் முகவர்களுக்கு 50 காசு குறைவாக சப்ளை செய்கிறார்கள். பால் முகவர்கள் லீக்கேஜ் போன்ற இழப்புகளையும் தாங்கி சில்லரை கடைகளுக்கு அதிகாலை 4 மணி முதல் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் 50 காசு கூடுதலாக விற்கிறார்கள். கடைக்காரர்கள் கூடுதலாக 50 காசு வைத்து விற்கிறார்கள். இப்படித் தான் லிட்டருக்கு ரூ. 2 வரை கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
இதை சரிகட்ட மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். விற்பனைக்கான கமிஷன் தொகையை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அது வரை இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.