தஞ்சை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்- கலெக்டர் தகவல்
- சேதம் அடைந்த மின்னணு கழிவுகளான சுவிட்போர்டுகள், விளக்குகள் டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
- பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர நடவடிக்கைகள் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்கும் கடைகளின் உரிமை–யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மின்னணு கழிவுகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 14 கோட்டங்களிலும் இந்த மின்னணு கழிவுகளான சேதம் அடைந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின்விசிறிகள், டியூப் லைட்கள், சுவிட்போர்டுகள், விளக்குகள், என டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
அவ்வாறு சேகரிக்கப்–பட்டுள்ள பொருட்கள் தஞ்சை திலகர் திடலில் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கூடை தயாரித்தல், பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.
இவற்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் திலகர் திடல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதோடு, மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 3 நாட்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சேகரிப்பு பணியில் 15 வாகனங்கள், 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 டன் வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த கழிவுகள் அனைத்தும் மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது"என்றார்.