திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்க பணிகள் தீவிரம்
- இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
- 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.
தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.
இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.