முகையூர் அருகே ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்: போக்குவரத்து துண்டிப்பு
- தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
- பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நேற்று நள்ளிரவு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது.
இதனால் வீரபாண்டி ஏரி உடைந்து திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் உள்ள அரகண்டநல்லூர் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு தண்ணீர் வேகமாக செல்வதால் ஆற்றங்கரை ஓரமாக வசித்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டில் நின்று என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மனம்பூண்டியில் உள்ள ஓம் சக்தி நகர், பெருமாள் கோவில் தெரு, அஷ்டலட்சுமி நகர், தெய்வீகன் தெரு, தேவனூர் கூட்ரோடு, பழனி நகர், அரகண்டநல்லூர், பச்சையம்மன் கோவில் பகுதி ஆசிரியர் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்ததில் சுமார் 1000 வீடுகள் தத்தளித்து கொண்டிருக்கின்றது.
திடீரென தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் தற்சமயம் தஞ்சம் அடைந்துள்ளனர். மாடியில் தஞ்சம் அடைந்த மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற இதுவரை மோட்டார் படகு மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரும் வராததால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து பதட்டமான நிலையில் உள்ளனர்.
மேலும், தற்போது காலை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரகண்டநல்லூர் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஓடும் வெள்ளம் நீரை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருவதுடன் செல்போனில் செல்பி படம் எடுத்தும் வருகின்றனர்.
ஆற்றின் வேகம் நீரின் அளவு குறித்து கொஞ்சம் கூட பயமில்லாமல் பொதுமக்கள் ஜாலியாக நின்று வேடிக்கை பார்ப்பதை போலீசாரும் அப்புறப்படுத்தவில்லை. திருக்கோவிலூர் பம்ப்ஹவுஸ் ரோட்டில் தென் பெண்ணை ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததால் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு திருக்கோவிலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகையூர் ஏரி உடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கீழையூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நகர மன்ற தலைவர் டி. என். முருகன் ஆணையாளர் திவ்யா துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து வருகின்றனர்.