பாலக்கோடு அருகே காட்டு யானை மிதித்து முதியவர் பலி- கிராம மக்கள் பீதி
- யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.
அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.