கொசுக்கள் தொல்லையால் உடுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள்
- வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.
- அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் அங்கு கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. அதன் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யானை, மான், காட்டெருமை, கருமந்தி, சிங்கவால் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.
அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை. மேலும் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன.
அப்போது அந்த வழியாக வருகின்ற வாகனங்களை யானைகள் வழிமறித்தும் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தும் வருகின்றனர். எனவே உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவதோ அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ உள்ளிட்ட செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.