உள்ளூர் செய்திகள்

பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் இருமல், தொண்டை வலியால் ஏராளமானோர் அவதி: ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் மக்கள்

Published On 2024-11-24 06:20 GMT   |   Update On 2024-11-24 06:20 GMT
  • ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொன்னேரி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. பின்னர் மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவும் இருக்கிறது.

மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் ஏராளமானோர் சளி, இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிகமானோருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி அதிகம் உள்ளது. மேலும் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சளி, இருமலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் 10 நாட்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதால் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-

பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் தற்போது ஏராளமானோருக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சளி இருமல் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மாத்திரை, டானிக் உட்கொள்வது தவறு. அது மேலும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News