தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு
- 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பெருந்துறை கிளை சிறையில்அடைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் திருப்பூரில் சொந்தமாக நூல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோரும் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இது குறித்து தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தப்படி வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பேசினர்.
தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதும், நூல் கம்பெனி உரிமையாளர் சேகர், துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருவாரூரை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிதுரை, நெல்லையை சேர்ந்த சுபாஷ் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறை யில்அடைத்தனர்.