5 வயது வட மாநில சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
- லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.
- இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
கொடுமுடி:
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் படகுடா பகுதியை சேர்ந்தவர் சோட்டுக்குமார். இவரது மனைவி அனிதாடிகள். இவர்களுக்கு லதிக்குமார் (5) என்ற மகன் உள்ளான்.
சோட்டுகுமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மலையம் பாளையம் அடுத்த கணபதிபாளையத்தில் உள்ள சிமெண்ட் கல் அறுக்கும் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
சோட்டு குமாருடன் அவரது மனைவியும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த கம்பெனியில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் மகன் லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோட்டுகுமார் மற்றும் அவரது மனைவி மகனை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்ப தாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சோட்டுகுமார் மனைவியுடன் சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் அவர்களது மகன் மிதந்து கொண்டு இருந்தான். இதை கண்டு அவர்கள் அலறி துடித்தனர். இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லதிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரி சோதித்த டாக்டர்கள் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மலை யம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விளையாடிய போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.