பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
- பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- இரவு கம்பம் பிடுங்குதல் நடக்கிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் அம்மை அழைப்பு, அம்பாள் ஊஞ்சலாடுதல் மற்றும் அக்னி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சுமார் 7 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 60 அடி குண்டத்தில் பூசாரி பவுன் என்கிற பழனிச்சாமி மாலை அணிந்து முதலில் தீ மிதித்தார்.
அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் குண்டம் திருவிழாவில் கணக்கம்பா ளையம், பெருமுகை, கொண்டையம்பாளையம் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மாரியம்மன் மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மை அழைத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் அபிஷேக ஆராதனை நடக்கிறது.