பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான பாலம் இடிக்கும் பணி தீவிரம்
- சத்தியமங்கலத்தில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- அப்போது அந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரசத்ததுடன் பவானி ஆற்றில் விழுந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆறு செல்கிறது. இந்த பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கருங்கற்கள், செங்கல் கொண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது.
இது பழமையான பாலம் என்பதால் ஒரு சில இடங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகே பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த புதிய பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் பழைய பாலம் வழியாக ஒரு சில வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
இந்த நிலையில் பழைய பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் தற்போது அந்த பகுதியில் வாகனம் அதிகளவில் சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து பழைமையான பாலத்தை இடித்து விட்டு ரூ.11 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி கடந்த 1 வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பழைய பாலம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடந்து வந்தது.
இந்த பாலத்தை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பணியாளர்கள் இடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரசத்ததுடன் பவானி ஆற்றில் விழுந்தது.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பாலம் இடிக்கும் பணி நடப்பதை பார்த்து நிம்மதி அடைந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் பாலம் இடிக்கும் பணியை வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, பழமையான பாலம் இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முழுவதுமாக இடித்த பின்பு அதே பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க ப்படும் என தெரிவித்தனர்.