ஈரோட்டில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
- போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சூரம்பட்டி போலீசார் ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து, சபரி கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (21), ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, ஓம்காளியம்மன் கோவில் முதல் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் வெற்றிவேலிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் எடை போடும் மெஷின் ஒன்றும், மோகன்ராஜிடம் 400 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 750 கிராம் கஞ்சா, எடை மெஷி ன்கள் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.