- கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
- கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.
இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.