மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததை தடுத்து நிறுத்திய எம்.எல்.ஏ.
- இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர்.
- கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஒடை அருகே மருத்துவக் கழிவு மற்றும் பிளாஸ்டிக்கழிவு பொருட்களை கொட்டி இரவு நேரங்களில் தீ வைப்பதாகவும் இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் புகார் கூறினர்.
இதனை அடுத்து அவ்வாறு கழிவுகளை கொட்டி தீ வைக்கும் பொழுது உடனடியாக தகவலை கொடுங்கள் இரவு எந்த நேரமாக இருந்தாலும் அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்றுதெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர். இதனை அந்தப் பகுதி மக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு தெரிவித்தார்கள்.
உடனடியாக எம்.எல்.ஏ., அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டு அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனத்தையும் வரவழைத்து அந்த தீயை முற்றிலும் அனைத்து மருத்துவக் கழிவுகளை அகற்ற செய்தார்.மேலும் இனி இதுபோல் மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அப்போது துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.