தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
ஈரோடு:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய- மாநில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட தலைவர் கலை வாசம் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.