ஈரோட்டில் சூறாவளி காற்றால் மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன
- ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
- பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.
குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.
பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.
இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.