தனிமையில் இருந்த காதல் ஜோடியிடம் பணம் பறிப்பு: கைதான போலீஸ்காரர்களின் குற்ற பின்னணி குறித்து விசாரணை
- 2 போலீஸ்காரர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
- பணியில் சேர்ந்த நாள் முதல் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டனரா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்தி ரேட்டு அதிரடியாக உத்தரவிட்டார்.
சென்னை:
தாம்பரம் அடுத்துள்ள மணிமங்கலத்தில், கடந்த வாரம் ஒரு காதல் ஜோடி காரில் தனிமையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மணிமங்கலம் போலீஸ்காரர்கள் மணிபாரதி (வயது 37), அமிர்தராஜ் (35) ஆகியோர் காதல் ஜோடி காரில் இருப்பதை கண்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்களது முகவரிகளை வாங்கி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்போவதாக மிரட்டியுள்ளனர்.
பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றால் நாங்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் போலீசார் நிபந்தனை போட்டனர். இறுதியாக பணம் கேட்டபோது, காதல் ஜோடியிடம் ரொக்கம் இல்லை. இதையடுத்து கூகுள்பே மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுக் கொண்டு பல மணி நேரத்துக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் போலீசார், 2 போலீஸ்காரர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் மணிபாரதி, அமிர்தராஜ் ஆகியோரை கைது செய்தார்.
இவர்களை தாம்பரம் மாஜி்ஸ்திரேட்டு எஸ்.சஹானா முன்பு ஆஜர்படுத்தினர். ஆவணங்களை படித்துப் பார்த்த மாஜிஸ்தி ரேட்டு எஸ்.சஹானா, "இந்த வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது, இந்த 2 போலீஸ்காரர்களும் பணம் பறித்த குற்றத்தை மட்டும் செய்ததாக தெரியவில்லை. அதையும் தாண்டி மிகப்பெரிய குற்றத்தை செய்திருப்பதாக தெரிகிறது.
இளம் பெண்ணிடம் பெண் போலீஸ் இல்லாமல் இவர்கள் விசாரணை நடத்தியது ஏன்? இவர்கள் ஏற்கனவே இதுபோல குற்றங்களை செய்திருக்க வேண்டும். அதனால், இவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டனரா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.