உள்ளூர் செய்திகள்

4-வது கணவரை உதறிவிட்டு வாலிபரை 5-வது திருமணம் செய்ய வந்த இளம்பெண்

Published On 2024-11-05 06:26 GMT   |   Update On 2024-11-05 06:26 GMT
  • 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி விட்டதாக 4-வது கணவர் போலீசில் கூறினார்.
  • விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என போலீசார் அறிவுரை கூறினர்.

இரணியல்:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்தார். அவர் போலீஸ் நிலையம் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி விசாரித்த போது, தற்போது குமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தனது மனைவி வந்ததும், அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ மற்றும் போலீசார், அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்ட போது தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது ஒரு கோவிலில் வைத்து வாலிபருக்கும் திண்டுக்கல் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், வாலிபரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அந்த பெண், திண்டுக்கல் தொழிலாளி தனக்கு 4-வது கணவர் என்றும், அவர் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட வாலிபர் உடன் இணைந்து வாழ விரும்பி வந்ததாகவும் கூறினார். ஆனால் அவர் முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வாழ அறிவுரை வழங்கினர்.

ஆனால் அந்த பெண், கணவர் மற்றும் மகன்களை உதறிவிட்டு பேயன் குழி வாலிபருடன் சென்று விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News