குற்றாலத்தில் காலை முதல் குளிக்க அனுமதி
- அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது.
- பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 84 அடி கொள்ளவு கொண்ட ராமநதி அணை மற்றும் 85 அடி கொண்ட கடனா அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றும் ராமநதி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது. கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அந்த அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை. அந்த அணையில் 48.23 அடி நீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.
ஆய்குடியில் பிற்பகலில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. இரவு முழுவதும் தொடர் நீர்வரத்தால் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மழை குறைவால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கழுகுமலை, கடம்பூர், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கணக்கில் கனமழை கொட்டியது. விளாத்திகுளத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது.
அந்த பகுதிகளில் உள்ள குளங்களுக்கும் நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கழுகுமலை, விளாத்திகுளம் மற்றும் கடம்பூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றன. திருச்செந்தூரில் 24 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
கோவில்பட்டி, எட்டயபுரம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி, வேடநத்தம் பகுதிகளிலும் பெய்த மழையால் பூமி குளர்ச்சியானது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய இடங்களில் லேசான சாரல் அடித்தது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்வதால், நெல், பயிறு வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 28 மில்லிமீட்டரும், நம்பியாறில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. புறநகர் பகுதிகளில் மழை பெரிதாக பெய்யவில்லை. மாநகர் பகுதியில் மட்டும் சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை பிசான பருவ நெல் சாகுபடி பணிக்காக பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
அந்த அணை நீர்மட்டம் நேற்று 93.50 அடியாக இருந்த நிலையில் தற்போது 92.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.