உள்ளூர் செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: 7-ந்தேதி உருவாக வாய்ப்பு

Published On 2024-11-05 06:46 GMT   |   Update On 2024-11-05 06:46 GMT
  • 7-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
  • இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை.

சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நாளை மறுநாள் (7-ந்தேதி) புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே வருகிற 7-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம்.

தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பில்லூர் அணை பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதற்கு

அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 11 செ.மீ. மழையும், பல இடங்களில் 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும். வருகிற 8-ந்தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் கனமழை பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News