விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் பெண் போலீஸ் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி
- பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
- கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
வேடசந்தூர்:
சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் நித்யா (வயது 35). இதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (38) என்பவருடன் நேற்று மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சாலையில் தறிகெட்டு ஓடிய கார் இவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் பலியான நித்யாவின் தந்தை சவுந்தர்ராஜன் இறந்து விட்டார். தாய் சரஸ்வதி (63) வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நித்யாவுக்கு 2 மூத்த சகோதரிகளும், ஒரு அண்ணனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது நித்யாவின் ஆசையாக இருந்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். 16 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
திருமணமாகாமல் காவல் துறையில் தொடர்ந்து துடிப்பாக பணியாற்றி வந்த நித்யா விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.