வாசுதேவநல்லூரில் தீவிர தூய்மை பணி முகாம் பேரணி
- அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக தீவிர தூய்மை பணி முகாம் பேரணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 32.60 லட்சம் மதிப்பீட்டில் புதுக்காலனியில் பூங்கா அமைக்கும் பணிகளையும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் செண்பகக்கால் ஓடைத் தெருவில் சிமெண்ட் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 161 லட்சம் மதிப்பீட்டில் பட்டா ஊரணியை மேம்பாடு செய்யும் பணிகளுக்கு தனுஷ்குமார் எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.