வங்கியில் இருந்து பேசுவதாக கூறி நூதன மோசடி: தையல் தொழிலாளி தற்கொலை
- பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு செல்போன் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது கிரெடிட் கார்டு சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண், செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்(ஓ.டி.பி.) வரும் என்றும், அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை பிரகாஷ் உணர்ந்தார்.
உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் ரூ.1லட்சம் பறிபோனதால் விரக்தி அடைந்த பிரகாஷ், விஷம் குடித்து விட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.