கரும்புக்கான நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்
- உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத்தொகையை பெற்றுத் தர வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் மற்றும் விவசாயிகள் உர சாக்குகளை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டும், கையில் கரும்புகளோடும் வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.இதையடுத்து அவர்கள் தங்களது மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது ;-
குறுவை சாகுபடி பணிகள் டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மேலும் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளின் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.