உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

Published On 2023-09-29 10:16 GMT   |   Update On 2023-09-29 10:16 GMT
  • சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதன் காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது. ஆகையால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுவதுமாக எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் குறைந்த அளவு பயிர் காப்பீடு தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News