கொடைக்கானல் அருகே செயல்படாத கால்நடை ஆஸ்பத்திரியால் விவசாயிகள் தவிப்பு
- அட்டுவம்பட்டியில் இருந்து வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- வில்பட்டி கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் மேற்கொள்ளும் மக்கள் தங்களது விவசாய பணிகளுக்கென வளர்ப்பு மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பகுதியில் இயங்கிவந்த கால்நடை ஆஸ்பத்திரி செயல்படாமல் உள்ளது.
இதனால் கால் நடைகளுக்கு சிகிக்சை பெற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அட்டுவம்பட்டியில் இருந்து பிக்கப் வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் கால் நடை ஆஸ்பத்திரி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.