கலெக்ஷன் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய 2 ஊழியர்களை போலீசாரிடம் ஒப்படைத்த பைனான்ஸ் உரிமையாளர்: தேனி, திண்டுக்கல் வாலிபர்கள் கைது
- இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.
- இதற்காக பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள பாப்பான்குளத்தில் வசிப்பவர் பழனிசாமி (வயது 41). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து தினமும் வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். தேனி மாவட்டம் தேவாரம் வட்டம் உத்தபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25), திண்டுக்கல் மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த அருண்குமார் (27) ஆகிய இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.
இவ்விருவரும் நேற்று முன்தினம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசூலுக்கு சென்றனர். இரவு 9 மணிக்கு விழுப்புரத்திற்கு லேசான காயங்களுடன், முன்பக்கம் உடைக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளுடன் திரும்பினர். நாங்கள் இருவரும் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இருவேல்பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பலை தங்களை வழிமறித்து தாக்கியதாகவும், பையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகவும், உயிர் பிழைத்து வந்ததாகவும் பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமியிடம் கூறினர்.
இதையடுத்து பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, 2 பேரையும் ஆபீஸ் ரூமிற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். தீபாவளி செலவுக்கும் பணம் இல்லை. இதற்காக பணம் கொள்ளையடி க்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர். மேலும், பணத்தை இருவேல்பட்டு ஏரிக்கரை அருகேயுள்ள பனைமரத்தின் கீழ் பள்ளம் தோண்டி புதைத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இருவேல்பட்டு ஏரிக்கரைக்கு விரைந்த பழனிசாமி, பனைமரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவங்களை கூறி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், பணம் திருடு போனதாக நாடகமாடிய ஈஸ்வரன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.