தீ விபத்தில் கடையை இழந்த 57 வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் நிதி உதவி ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
- தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
- கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அங்கு கடைகள் அமைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் தங்களது முதலீடுகளை இழந்து கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து அங்கு கடை அமைத்திருந்த 57 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பாக வியாபாரி சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், கடை வியாபாரிகளின் நிலையை விளக்கி, அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.