நிதிநிறுவனம் நெருக்கடி: அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை
- நிதிநிறுவனம் நெருக்கடியால் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
- விழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வாணக்கார வீதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் ரவிக்குமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பாபுஜி விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் கடன் வாங்கினார்.தற்போது தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதிநிறுவன ஊழியர் மேகநாதன், கட்டிட தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை.
அப்போது பாபுஜியின் சகோதரர் ரவிக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்த நிதிநிறுவன ஊழியர் மேகநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிக்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை தூக்கி கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்துவிழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவன ஊழியர் நெருக்கடி கொடுத்ததால் ரவிக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக நிதிநிறுவன ஊழியர் மேகநாதனை போலீசார் தேடிவருகிறார்கள்.