கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
- தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
ஊட்டி,
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேருராட்சியில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள், வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார அலுவலர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5500 அபராதம் விதிக்கபட்டது.