முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் 93,571 இடங்கள் நிரம்பின
- முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கியது.
- 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை :
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு நடந்தது. 3-வது சுற்று கலந்தாய்வு நிறைவில், பொதுப்பிரிவில் 53 ஆயிரத்து 874 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 5 ஆயிரத்து 99 இடங்களும் நிரம்பி இருந்தன.
இந்தநிலையில் 4-வது சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் பொதுப்பிரிவில் 30 ஆயிரத்து 938 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 660 இடங்களும் நிரம்பின. இதன்படி முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து இருக்கிறது.
மொத்தம் உள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்களில், 93 ஆயிரத்து 571 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர். இதன்மூலம் 60 ஆயிரத்து 707 இடங்கள் தற்போது காலியாக உள்ளன.
கடந்த ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவின்போது, 88 ஆயிரத்து 596 இடங்கள் நிரம்பி இருந்தன. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 4 ஆயிரத்து 975 இடங்கள் அதிகமாக நிரம்பி இருப்பது புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.