உள்ளூர் செய்திகள் (District)

காசிமேட்டில் பயங்கரம்: நண்பரை அடித்து கொன்று உடலை படகின் ஐஸ் பெட்டியில் வைத்த மீனவர் கைது

Published On 2023-05-06 07:27 GMT   |   Update On 2023-05-06 07:27 GMT
  • கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.
  • பிரேத பரிசோதனையின் போது கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.

திருவொற்றியூர்:

புது வண்ணாரப்பேட்டை அன்னைசத்யா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 47).

இவர் காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.

பின்னர் அன்றே கரைக்கு திரும்பிய வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளனர்.

அப்போது சகாயத்திற்கும் வேலுவுக்கும் போதை தலைக்கு ஏறியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஆதரவாக பரசுராமன் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் காசிமேடு நாகூரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம் வேலு எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது போதையில் இருந்த பரசுராமன் ஆத்திரமடைந்து வேலுவின் கழுத்தில் தாக்கியுள்ளார். தொடர்ந்து காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடனே வேலுவின் உடலை இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் உடலை கொண்டு போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதைப்பார்த்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (52) என்பவர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுவின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் போது அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பரசுராமனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News