உள்ளூர் செய்திகள்

உரிமை கோரப்படாத 5 கார்கள் யாருடையது?- கோவை உக்கடத்தில் விசாரணை

Published On 2022-10-27 10:33 GMT   |   Update On 2022-10-27 10:33 GMT
  • 7 கார்களின் உரிமையாளர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்று நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தனர்.
  • போலீசார் கேட்பாரின்றி நின்ற கார் உரிமையாளர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்புடைய கும்பலும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை:

கோவையில் கார் வெடிப்பை தொடர்ந்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ரோந்து சென்றும், வாகன சோதனை நடத்தியும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று மாநகர போக்குவரத்து போலீசார் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் கேட்பாரின்றி நின்ற வாகனங்களை அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரின்றியும் நின்று கொண்டு இருந்த 12 கார்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு எடுத்து சென்றனர்.

இதில் 7 கார்களின் உரிமையாளர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்று நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் 7 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள 5 கார்களை வாங்கி வராத உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கார்கள் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனையடுத்து போலீசார் கேட்பாரின்றி நின்ற கார் உரிமையாளர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்புடைய கும்பலும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கார் பறிமுதல் செய்யப்பட்ட உக்கடம் பகுதியில் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News