உள்ளூர் செய்திகள்

நெல்லையில் காய்கறிகளை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் கடும் உயர்வு - சீரகம் கிலோ ரூ.800-க்கு விற்பனை

Published On 2023-07-06 09:22 GMT   |   Update On 2023-07-06 09:22 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது.
  • மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை மார்க்கெட்களுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளது.

காய்கறி விலை

இதனால் கடந்த சில நாட்களாக டவுன் நயினார் குளம் மார்க்கெட், பாளை மார்க்கெட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது. இதே போல சாம்பார் வெங்காயம் விலையும் ரூ.150 ஆக உயர்ந்தது. இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

குடை மிளகாய், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையிலும் விற்கப்படும் நிலையில் கேரட் விலை ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டு பூண்டு ரூ.180, கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300, இமாச்சல் பூண்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

சீரகம் கிலோ ரூ.800

இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று பாளை மார்க்கெட்டில் சீரகம் விலை கிலோ ரூ.800- ஆக உயர்ந்தது. மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல துவரம் பருப்பு ரூ.158-ம், உளுந்து ரூ.132-ம், மல்லி ரூ.110-ம், வெந்தயம் ரூ.130-ம், கடுகு ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Tags:    

Similar News