திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மத்திய பிரதேச அரசு அழைப்பு
- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவ–னம்
- ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
திருப்பூர், நவ.21-
திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக பனியன் தொழில் மந்தநிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெளிமாநில அரசு, தங்கள் மாநிலங்களில் பனியன் தொழில் தொடங்க திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு–வி–னர் திருப்–பூர் வந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய பிரதேச மாநில அரசின் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் மணிஷ் சிங் தலையில் அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்–துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.
கூடுதல் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி, மின்கட்டண சலுகை, தொழில் முதலீட்டுக்கடன் சலுகை, ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 400 கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகவசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள். தங்கள் மாநிலத்துக்கு வந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்–களை தொடங்–கி–னால் சலுகை அளிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அழைப்பு விடுத்தனர்.