கடலூர் மாவட்டத்தில் கடற்கரை, நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பு: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி
- விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்.
- கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளை தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய நீர் நிலைகளில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம்அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில் காலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் மாலையில் ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலையை பயபக்தியுடன் கரைத்தனர். இதனை தொடர்ந்து இன்று 3 -ம்நாள் மற்றும் வெள்ளிக்கிழமை 5-ம் நாளில் விநாயகர் சிலை மாவட்டம் முழுவதிலிருந்து கரைப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு ஆரவாரத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இதைெயாட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெரிய அளவில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு கொண்டு வந்தபோது போலீஸ் நிலையம் முன்பு விநாயகர் சிலையை இறக்கி அங்கிருந்து விநாயகர் சிலையை சிறிது தூரம் கொண்டு சென்று கற்பூரம், ஊதுவத்தி ஏற்றி அங்கு தயார் நிலையில் இருந்த களப்பணியாளர்கள் விநாயகர் சிலையை பாதுகாப்பாக கடலில் கரைத்தனர். மேலும் சிறிய அளவிலான விநாயகர் சிலையை பொதுமக்கள் கொண்டு சென்று வேறு இடத்தில் கரைப்பதற்கு தனியாக அனுப்பி வைத்தனர். அவர்களும் பயபக்தியுடன் விநாயகர் சிலையை கடலில் விட்டு கரைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. 3-வது நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலூர் கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையில் இருந்து இந்து முன்னணி முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதே போல பண்ருட்டி படவேட்டம்மன் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பண்ருட்டி 4 முனை சந்திப்பு பண்ருட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பண்ருட்டியின் நகர முஸ்லிம் ஜமாத்தார்கள், பண்ருட்டி நகர கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜ தாமரை பாண்டியன், நந்தகுமார், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.