உள்ளூர் செய்திகள்

மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவர் இயேசு - கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக ஆளுநர் பேச்சு

Published On 2022-12-22 00:07 GMT   |   Update On 2022-12-22 00:07 GMT
  • ஆளுநர் மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேக் வெட்டினார்.
  • அப்போது பேசிய அவர் இயேசு மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார் என்றார்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு கேக் வெட்டினார்.

இந்த விழாவில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களை ஆளுநர் பாராட்டினார். மதத் தலைவர்கள், ஜி20 நாடுகளைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். அதன்பின், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

மனித நேயத்தைக் காப்பதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். இயேசு மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார். தம்மை சிலுவையில் அறைந்தவர்களிடம் கூட அன்பு செலுத்தியதோடு, அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடினார்.

எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் மட்டுமில்லாமல், அனைவருக்கும் அன்பு, மன்னிப்பு, இரக்கம் என்ற செய்தியை அளித்தவர் இயேசு கிறிஸ்து.

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தில் ஜி20 நாடுகள் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது.

உலக நாடுகளில் இது ஒரு முக்கிய அம்சமாகவும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News