வண்ணார்பேட்டை மேம்பால தூண்களில் வைக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் காவலர்
- நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
- பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அவை ஒளிரும்போது வாகனஓட்டிகளை கவரும் விதத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மேம்பாலங்களின் கீழ் பகுதி தூண்களை அழகுப்படுத்தும் விதமாக சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்பேரில் சிறிய அளவிலான பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.
இதனை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சீனிவாசன் போக்குவரத்தை சரி செய்யும் பணிக்கு இடையில், மேம்பால தூண்களில் வாடிய நிலையில் இருந்த செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து போக்குவரத்து காவலரை பாராட்டினர்.